யயாதியின் மகனான மன்னர்யது, ஒரு நாள் அவதூதரான தத்தாத்ரேயரிடம், ""தாங்கள் எந்த குருவையும் நாடிச்செல்லாமலேயே தங்களுக்கு மிகவும் ஆழமான, தெளிந்த நல்லறிவு கிடைத்ததெப்படி?'' என்று கேட்டார். தனக்கு இவ்வுலகிலமைந்த பதினாறு குருமார்களைப் பற்றி விளக்கிய அவதூத சந்நியாசி, மற்றுமுள்ள குருமார்களிடம் கற்ற தத்துவங்களையும் விவரித்தார்.
"பிங்களா என்ற தாசி மூலம் காமபோகங்களைத் துறந்து, பகவானை சரணடையவேண்டும்' என்ற ஞானத்தை அடைந்ததாக அவதூதர் கூறினார்.
17. தாசி: பிங்களா என்ற விலைமகள், தன் உடலால் காமசுகத்தை விற்று, அதனால் பொருளீட்டி வாழ்ந்து வந்தாள். ஒரு நாள், காமுகர்கள் தன்னை நாடிவராததுகண்டு கவலையுற்றாள். வளமையையும், வறுமையையும் வயிறு அறியாது. அவள் வயிறு பசிப்பிணியால் துவண்டது. இன்றுவந்த பசி நாளையும் வருமே என்று பயந்தாள். "எலியை அழிக்க பூனை வளர்த்து, பூனையால் வீடு பாழானதே. வடவைத் தீயாய் எரியும் என் வயிற்றுப் பசியைப் போக்க பிறரின் காமத்தீயை வளர்த்தேனோ? அதனால் என் வாழ்வை இழந்தேனோ' என்ற கேள்வி ஞானவேள்வியானது. வயிற்றுப் பசி ஞானப் பசியாய் மாறியது. சிந்திக்கலானாள். "எலும்புகள் எனும் தூண்களால் நிலைநிறுத்தப்பட்டு, சதை எனும் சுதை பூசப்பட்டு, தோலெனும் திரைச்சீலைகளால் மூடப்பட்டுள்ள உடலெனும் வீடு ஒரு நாள் அழியும். பருவமழைக்கு விரியும் குடை சாரல் நின்றதும் சுருங்கிப்போவதுபோல, பருவம் போனபின் உருவமும் உருகிப்போகும். இலைகள் உதிர்ந்த பட்டமரத்தில் பறவைகள் இளைப்பாறுவதில்லை. இளமையை இழந்தபின் இந்த வாழ்க்கை வறுமையால் வெறுமையாகும். வாடிய மலர்களை வண்டுகள் வருடுவதில்லை. வணிகரின் வறண்ட புன்னகையாக, நெஞ்சில் அன்பில்லாமல், வஞ்சகக் காமக்கிழத்தியாய் வாழுதல் இழிசெயலன்றோ? இறந்தபின் அனைவரும் அருவருக்கும் இந்த உடலை, இருக்கும்போது அழகுபடுத்தி, திரவியம்வேண்டி வாசனை திரவியம் பூசி காமக்கழுகுகளுக்கு இரையாக்குதல் தகுமோ? பொன்னாலான திருவோடு ஏந்தி பிச்சைக்குப்போன பரதேசியாக, கிடைத்தற்கரிய வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டேனோ? பொருட்களை விழுங்கியபின்னும் பசி தணியாத தீயினைப்போல, எல்லா சுகபோகங்களையும் அனுபவித்தபின்னும் ஆசையெனும் நெருப்பு அடங்கவில்லையே. அந்த ஆசைத்தீ என்னையே எரித்துவிடுமோ' என்று பலவாறாக அழுதுபுலம்பினாள். வருந்தினாள். திருந்தினாள். உராயும் மூங்கிலின் ஒரு பொறி காட்டையழிப்பது போல ஞானத்தீயில் காமம் வெந்து தணிந்தது. தரும சிந்தை கொண்டாள். தன்மேல் சினம் கொண்டாள். முந்தைய வாழ்க்கைக்கு முடிவு கண்டாள். அவள் முத்தாய் உதிர்த்த கண்ணீர்த் துளியில் பகவான் முகுந்தன் தெரிந்தான்.
18. குரரப் பறவை (அன்றில்): குரரப் பறவையிடமிருந்து தேவைக்கு அதிகமாக பொருட்களை சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது என்ற ஞானமும், தன்னுயிரை தானே மாய்த்துக்கொள்ளுதல் பாவமென்ற புரிதலையும் பெறலாம். நெய்தல் நிலத்து பனை மரத்தில் வாழும் அன்றில் பறவை, தன் கூட்டில் சேர்த்து வைக்க மீன்களைக் கவர்ந்து செல்லும்போது, இரைக்காக மற்ற பறவைகளால் துரத்தித் துன்புறுத்தப்படும். வேதனையைப் பொறுக்கமுடியாத அன்றில் பறவை தன் இரையை இழந்து அமைதிபெறும். தேவைக்கதிகமாய் சேர்த்துவைப்போருக்கு சுற்றத்தாரின் பகையும் தொல்லையும் சேரும். அளவுக்கதிகமான செல்வம் உடனிருந்தே கொல்லும் வியாதியைப் போன்றது. பேய்போல் அலைந்து சேர்த்து, பூதமாய்க் காத்த செல்வம், பிணமாகும்போது காணாமல்போகும். இணைபிரியாமல் ஒன்றில் ஒன்றாய் வாழும் அன்றில் பறவை, தன் துணைபுணர்பேடை (பெண் பறவை) உயிர் நீத்தால், தானும் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும்தானே. தன்னைத் தானே படைத்துக்கொள்ள முடியாதவர், தானே தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமையில்லை என்பதை உணர வேண்டும்.
19. பாலகன்: பச்சிளம் குழந்தையைப் போல மான-அவமானம் பற்றிய கவலைகள் இல்லாமல், எப்போதும் பரமானந்தத்தில் மூழ்கியிருப்பவரே உண்மையான சுகப்பிரும்மம். சூதுவாது இல்லாத, வேற்றுமை உணர்வற்ற, காரணமின்றி மகிழ்ச்சியில் இருக்கின்றவர் மனமே கடவுளின் இருப்பிடம். இதை குழந்தையிடமிருந்து நாம் அறியலாம்.
20. குமரி: கன்னிப்பெண்னின் கைவளை யல்கள் ஜதையாக இருந்து சப்தமிடு வதைப்போல பலபேர்களுடன் வசித்தால் சண்டை- சச்சரவு ஏற்படும். இரண்டு பெண்கள் இருந்தால் வீண்பேச்சு வளர்வதுபோலாகும். தவளைகள் சப்தமிட்டுத் தங்களை விழுங்கவரும் பாம்புகளுக்குத் தங்கள் இருப்பிடத்தைக் காட்டிக்கொடுக்கும். ஆகவே, ஞானி, பெண்ணின் கைவளையல்கள்போலல்லாமல் கைக்கங்கணத்தைப்போல தனியாக மௌனத் தில் இருக்கவேண்டும். யோகி எப்போதும் தனித்திருக்கவேண்டும். கூட்டத்தோடு சேரக்கூடாது. தவசீலர்கள் ஆளரவமில்லாத மலைக்குகைக்குள் ஏகாந்தமாக வசிப்பதன் காரணமும் இதுவே. "தனித்திரு, விழித்திரு, பசித்திரு' என்பதே யோகிகளின் தாரக மந்திரம்.
21. வில்லாளியிடம் கற்ற ஞானம்: வில்லாளி அம்பு செலுத்தும்போது, தன் பார்வை சிதறாதவாறு இலக்கை குறிபார்த்து அம்பெய்வது போன்று, ஞானியும் தன் மனதைப் பூரணமாய் பூரணமாயுள்ள பரப்பிரம்மத்திடம் வைத்திருக்கவேண்டும். தன்னைச்சுற்றி நிகழும் மாற்றங்களில் மனதைச் செலுத்தாமல், தான் மேற்கொண்ட பணியில் உடும்பைப்போல உறுதியாய் இருத்தல்வேண்டும். இடைவிடாத முயற்சியாகிய அப்பியாசமும், குறிக் கோளையடைந்தே தீரவேண்டுமென்ற வைராக்கியமும் கொண்ட யோகசாதகனே வெற்றியடைவான். கலங்கிய நீரில் முகம் காணமுடியாது. சலனமுற்ற மனம் சாதனைக்குதவாது.
22. பாம்பிடம் ஞானி கற்ற பாடம்: பாம்பு தான் தங்குவதற்கு திட்டமிட்டு பெரிய இடத்தை அமைத்துக்கொள்வதில்லை. கரையான் புற்றில் குடிகொண்டு சுகமாக வாழ்கிறது. அதேபோன்று சிறிதுகாலமே நிகழும் வாழ்க்கையில் ஞானியும் தனக் கென வீடு கட்டிக்கொண்டு வாழாமல் மரத்தடி, குகைகள் போன்ற இடங்களையே நாடவேண்டும். "எதுவும் நமக்குச் சொந்த மில்லை; பரமபதமே நம் வீடு' என்றுணர்ந் தோரே நித்திய ஜீவிதம் பெறுவார் கள்.
23. சிலந்திப்பூச்சி: சிலந்திப்பூச்சி தன் வாய்வழியாக நூலைக் கொண்டுவந்து வலையைப் பின்னு கிறது. அந்த வலையால் சிலந்திக்கு இருப்பிடமும் இரை யும் கிடைக்கிறது. பின்பு, தானே அதைத் தன் வாய்க் குள் இழுத்துக்கொள் கிறது. பகவானும் உலகங்களைப் படைத்து, காத்து, ஊழிக்காலத்தில் தன்னுள் இழுத்துக் கொள்கிறான். தான் உருவாக்கிய வலையில் தானே வாழ்வதுபோல் இறைவன் நம்மைப் படைத்து, நமக்குள் வாழ்கிறான். தான் பின்னும் வலையில் சிலந்தி ஒருபோதும் மாட்டிக் கொள்வதில்லை. அவதாரம் எடுத்தாலும் பகவான் மாயையில் சிக்குவதில்லை என்பதே சிலந்தியிடமிருந்து கற்ற ஞானம். அனைத் துப் பொருட்களுக்குள்ளும் தனது ஞானத் தாலும், சக்தியாலும் வியாபித்திருப்பதால் திருமால் "விஸ்வாவாத்மா' என்றழைக்கப்படுகிறார்.
24. குளவி (வண்டு): குளவி கூடுகட்டி, ஒரு புழுவைக் கொண்டுவந்து அதில் அடைக்கும். புழு, தான் இங்கே வந்து மாட்டிக்கொண்டோமே என்று பயந்து, எப்போதும் குளவியையே நினைத் துக்கொண்டிருக்கும். அதன் விளைவாகத் தன் உடலை விடாமலே தானும் வண்டாக மாறிவிடுகிறது. இந்தக் குளவிபோன்றே பகவானையே சதாகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும் பக்தன் பகவானின் கல்யாண குணங்களைப் பெற்று, ஜீவன்முக்தனாகிவிடுகிறான். காந்தத்தைச் சேரும் இரும்பு காந்தமாவதுபோல், மனிதன் எதுவாக மாறவிரும்புகிறானோ அதுவாகவே ஆகிறான். மகாவாக்கியங்களில் ஒன்று ‘தத்வமசி.’(எதை சதாகாலமும் சிந்திக்கி றாயோ, நீயே அதுவாகிறாய்.)
அவதூதர் தன்னுடைய உடல்மூலம் கற்றுக்கொண்ட ஞானத்தைக் கூறுகிறார்:
கனி பழுக்கும்வரைதான் தோல் தேவை. மனம் கனியும்வரைதான் இந்த உடல் தேவை. உடல், பிறப்பு- இறப்பு தன்மையுடையது. புலன்கள் மிகவும் துன்பம் தரக்கூடியவை. நெடுநேரம் சாகையைச் சுழற்றி, புடம்போட்டு குயவன்செய்த பானை நொடிப்பொழுதில் உடைவதுபோல, பல மாதம் தவமிருந்து பெற்ற உயிர் கண்ணிமைக்கும் நேரத்தில் இறப்பென்னும் இறுதிநிலையை அடைந்துவிடும். சூலம் பிடித்து, எம பாசஞ்சுழற்றி தொடர்ந்துவரும் காலன் கைப்பட, உயிர் உடலைவிட்டுப் பிரியும். பசி, தாகம், மோகம், நோய், மூப்பு, மரணம் ஆகியவையெல்லாம் உடலால் நமக்கு வரும் துன்பமேயாகும். ஒன்பது வாயில்களையுடைய கூட்டின் உயிர்ப் பறவை, ஒரு நாள் ஏதோவொரு வாயிலில், இந்த உடல்கூட்டைவிட்டு நீங்கும். சாகும் உடலுக்கு சாந்திட்டு, மாயும் தேகத்திற்கு மையிட்டுப் பேணி வளர்த்தாலும், தீயிட்டுப் பார்த்தால் செம்பொன்னாகுமோ? விவேகம்- வைராக்கியத்தால் "இந்த உடல் பிறர்க்குரியது' (இந்த உடல் நான் அல்ல) என்ற உறுதியான அறிவுண்டாகிறது.
அதனால் இந்த உடலில் பற்றுக்கொள்ளாத வனாக நடமாடிக்கொண்டிருக்கிறேன்.
“எவர் அனைத்து ஜீவராசிகளிடத்தில் பகவானைக் காண்கிறாரோ, அவ்விதமே பகவானிடம் அனைத்து ஜீவராசிகளையும் காண்கிறாரோ அவரே முதன்மையான பக்தனாவர்’’ என்ற அவதூதரின் உபதேசத்தைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்ற யது மகாராஜா, தன் ஐயம் தெளிந்தார். அவதூதருக்கு சிரம் தாழ்த்தி, கரம் குவித்தார்.
(அமுதம் பெருகும்)